பொருள் விரிவாக்கம்

மின் கழிவு மேலாண்மைக்காக நாடளாவிய ரீதியில் ‘e-Kunu திட்டத்தை’ அங்குரார்ப்பணம் செய்தது டயலொக்

January 01st 2024         Colombo

 

Dialog MAS Enabler Programme

படத்தில் இடமிருந்து வலமாக: விபுல குணரத்ன, வர்த்தகநாமம் மற்றும் தொடர்பாடல்களுக்கான தலைவர், Cleantech (PVT) Ltd, ஸெவ் பெஸ்டோன்ஜி, சுற்றுச்சூழல் மற்றும் நிலைபேற்றுத்தன்மை முகாமையாளர், Cleantech (PVT) Ltd, கசுன் தென்னகோன், சிரேஷ்ட முகாமையாளர் - சுற்று பொருளாதார சேவைகள், Cleantech (PVT) Ltd, ருகிதா நாணயக்கார, பிரதம நிறைவேற்று அதிகாரி, Cleantech (PVT) Ltd, அசங்க ப்ரியதர்ஷன, பேண்தகைமை தலைவர் மற்றும் குழும இடர் மற்றும் இணக்க தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அசித் டி சில்வா, சிரேஷ்ட முகாமையாளர் - சமூக புத்தாக்கம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அஷினி பொதுபிட்டிய, நிபுணர் - பேண்தகைமை செயலாக்கம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அகில லக்ஷான், தலைமை தொழிற்பாட்டு பொறியியலாளர் - நிலைபேற்றுத்தன்மை மற்றும் பெருவணிகத்தாபன சமூக பொறுப்பு

இலங்கையில் மின் கழிவு மேலாண்மையை மாற்றியமைக்கும் இலக்குடன் தனது உற்பத்திசார் பொறுப்புவாய்ந்த முன்னெடுப்புகளில் ஒன்றான e-Kunu திட்டத்தை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அங்குரார்ப்பணம் செய்தது. நாடு முழுவதுமுள்ள டயலொக் வாடிக்கையாளர் மையங்களில் மின் கழிவுகளை உரியவகையில் சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்காக சேகரித்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

டயலொக்கின் தேசிய அளவிலான திட்டமாகிய "mWaste" இன் வெற்றியை தொடர்ந்து இத்திட்டம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 2008 இல் ஆரம்பமான "mWaste" நாளடைவில் 2014 அளவில் தேசிய மின் கழிவு மேலாண்மை திட்டத்தின் ஒரு அங்கமானது. e-Kunu திட்டமானது வெறுமனே கையடக்க தொலைபேசி கழிவுகளோடு நில்லாது மடிக்கணினிகள் (Laptops), மின்னேற்றிகள் (Chargers), மின்கலங்கள் (Batteries), அச்சு இயந்திரங்கள் (Printers) பலதரப்பட்ட மின் கழிவுகளை உள்ளடக்கவுள்ளது. e-Kunu திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central Environmental Authority) மற்றும் பாசல் மாநாட்டின் (Basel Convention) படி அபாயகரமான கழிவுகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட இயக்கம் மற்றும் அவற்றை அகற்றுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க ஒரு முழுமையான கழிவு முகாமைத்துவ சங்கிலியை நிறுவியுள்ளது.

இந்த முன்னெடுப்பானது ஒரு பொறுப்புள்ள பெருவணிகத்தாபன குடிமக்கள் என்ற ரீதியில் பேண்தகைமைமிக்க கழிவு முகாமைத்துவத்திற்கான தீர்வளித்தல் மற்றும் சுற்றுச்சூழலை முன்னின்று காத்தல் ஆகியவற்றில் டயலொக் காட்டும் அர்ப்பணிப்போடு பொருந்திப்போகின்றது. 2021ல் நிறுவனம் பெற்ற ISO 14001 சுற்றுச்சூழல் முகாமைத்துவ அமைப்புகள் தரநிலை தரச்சான்றிதழுக்கு அமைவாக, முறையற்ற வகையில் மின் கழிவுகளை வெளியேற்றுவதால் விளையும் அனர்த்தங்களையும் பொறுப்புள்ள வகையில் அவற்றை மீள்சுழற்சி செய்வது குறித்தும் வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் கற்பிப்பதன் மூலம் டயலொக் தனது சுற்றுச்சூழல் சார் பொறுப்புகளை ஸ்திரப்படுத்த எதிர்நோக்கியுள்ளது. மேலும் இம்முன்னெடுப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் குறிப்பாக 13ம் இலக்கு (SDG 13): காலநிலை செயற்பாட்டுக்கு பங்களிப்பாற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.

e-Kunu திட்டமானது சுற்றுச்சூழல் குறித்து கரிசனைகொள்ளும் சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களின் உத்வேகமிக்க பங்களிப்பில் தங்கியிருக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும்.இலங்கையின் நிலைபேறான எதிர்காலத்திற்கு ஊட்டமளிக்கும் அதேவேளை, ஏனைய நிறுவனங்களுக்கு ஒரு நல்லவிதமான முன்னுதாரணமாக திகழுமாறு பொறுப்புள்ள வகையில் மின் கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு பாதை வகுத்து காட்டியுள்ள டயலொக், வரையறுக்கப்பட்ட (தனியார்) Cleantech உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பொதுமக்கள் தமது மின் கழிவுகளை நாடளாவிய ரீதியில் உள்ள டயலொக் வாடிக்கையாளர் மையங்களில் கையளிக்க முடியும். e-Kunu பற்றிய மேலதிக தகவல்களை https://www.dialog.lk/e-kunu வழியாக பார்வையிடுங்கள்.