பொருள் விரிவாக்கம்

Dialog இன் Karuna.lk சேவையானது SLASSCOM திறன்சார் தேசிய விருதுகளில் ‘பயன்மிகு சிறந்த தொழில்நுட்பம்’ எனும் விருதினை வென்றுள்ளது

2023 ஜூன் 26         கொழும்பு

 

SLASSCOM National Ingenuity Awards 2023

படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும நிலைபேற்றுத்தன்மை உதவி முகாமையாளர் ஐங்கரராஜ் ஜெயராஜசிங்கம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இடர் மற்றும் இணக்க குழுமத் தலைவர் அசங்க பிரியதர்ஷன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வர்த்தக நாமம் மற்றும் ஊடக பிரிவின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் கயந்தி ரம்புக்வெல்ல, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி IdeaMart இன் சிரேஷ்ட Biz Lead, பசிந்து டி சில்வா.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மூலம் இயங்குகின்ற Karuna.lk சேவையானது தொழில்நுட்பத்தை நற்செயல்களுக்காக பயன்படுத்துவதற்கான அதன் ஒப்புவமையில்லா தகைமையை அங்கீகரிக்கும் வகையில், SLASSCOM தேசிய திறன்சார் தேசிய விருதுகள் 2023 இல் 'நற்செயல்களுக்கான சிறந்த மென்பொருள் கண்டுபிடிப்பு அல்லது புத்தாக்கம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றது.

அதற்கமைய, Karuna.lk இலங்கையின் முதல் crowdfunding தளமானது, சமூகத்தில் நற்தாக்கத்தை விளைவிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது. தேவைகள் உடையோருடன் நன்கொடையாளர்களை இணைக்கும், இந்த தளமானது உரிய நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில், உயர்மட்ட நிர்வாகத்தில் இயங்கும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான நிதி திரட்டும் இயந்திரத்தின் ஆதரவுடன் சமூக பொறுப்பின் மூலம் இலங்கையர்களின் வாழ்வை வலுவூட்டுவதையும் வளப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தத் தளமானது 107 தொண்டு நிறுவனங்களால் 116 முன்னெடுப்புகளை ஆதரித்துள்ளது, அவற்றில் 30% சுகாதாரப் பாதுகாப்புடனும், 30% கல்வியை மேம்படுத்துதலுடனும் தொடர்புடையன. சுகாதாரம், சமூகம், கல்வி, அவசரநிலை, சுற்றுச்சூழல், விளையாட்டு, புற்றுநோய், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக காரணங்களுக்கான அணுகலுடன், நன்கொடையாளர்கள் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கல்களை வழிநடத்துவதன் மூலம் முழுமையான வெளிப்படைத்தன்மையை இந்த தளம் உறுதி செய்கிறது. மேலும் Karuna.lk தளமானது அதன் அணுகல்தன்மை, வசதி, வெளிப்படைத்தன்மை, தன்னார்வத் தொண்டு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான பாராட்டைப் பெற்றுள்ளது.

"Karuna.lk இன் தாக்கத்தை அங்கீகரித்து இந்த மதிப்புமிக்க சிறந்த புத்தாக்க மென்பொருள் தொழில்நுட்ப விருதுகளைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் இடர் மற்றும் இணக்க குழுமத் தலைவர் அசங்க பிரியதர்ஷன தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் ,"Karuna.lk ஐ ஏற்றுக்கொண்ட நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தாராள சமூகத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் , மற்றும் எங்கள் சமூகத்தில் நல்லவிதமான மாற்றத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடிந்துள்ளதையிட்டு பெருமைப்படுகின்றோம். இந்த crowdfunding தளமானது ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தியை வெளிப்படுத்துகிறது, மேலும் சமூக நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது" என்றார்

"டயலொக்கின் Karuna.lk இயங்குதளமானது சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை உண்மையாகவே நிரூபித்துள்ளது, மேலும் SLASSCOM தேசிய விருதுகள் 2023 இல் தேசிய 'நற்செயல்களுக்கான சிறந்த மென்பொருள் கண்டுபிடிப்பு அல்லது புத்தாக்கம்’ என Karuna.lk அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தில் நற்தாக்கத்தை விளைவிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தளத்தின் விதிவிலக்கான பங்களிப்பு, உதவிக்கரம் வேண்டி நிற்போருடன் நன்கொடையாளர்களை இணைப்பது மற்றும் பல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றிற்கான அங்கீகாரமாக இது பிரதிபலிக்கின்றது" என SLASSCOM தலைவர் ஆஷிக் எம். அலி தெரிவித்தார்.

SLASSCOM தேசிய விருதுகள் 2023 சமூக சவால்களை எதிர்கொள்ளத்தக்க மற்றும் நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கத்தக்க சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்கின்றது மற்றும் அங்கீகரிக்கின்றது. டயலொக்கின் Karuna.lk இயங்குதளத்திற்கான இந்த அங்கீகாரமானது, இலங்கையர்களின் வாழ்க்கையையும் நிறுவனங்களையும் வலுவூட்டல் மற்றும் வளப்படுத்துவது என்ற அதன் நோக்கத்தில் பிரதிபலிக்கும் வகையில், சமூக நலனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.