பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் சிரேஷ்ட தேசிய வலைப்பந்தாட்ட செம்பியன்ஷிப் போட்டி - 2023

2023 பெப்ரவரி 02         கொழும்பு

 

Dialog Powers Senior National Netball Championship’

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு, உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க போட்டிக்கான அனுசரணை சான்றினை இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் (NFSL) தலைவி லக்ஷ்மி விக்டோரியாவிடம் கையளிப்பதை படத்தில் காணலாம். படத்தில் மேலும் (இடப்பக்கம்) தேசிய வலைப்பந்து சம்மேளனத்தின் குழு உறுப்பினர் சம்பா குணவர்தன, வலைப்பந்து சம்மேளனத்தின் பொருளாளர் பத்மினி ஹொரணகே ஆகியோரையும் காணலாம்.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஆசிய வலைப்பந்தாட்டத்தின் ராணியாக இலங்கை வலைப்பாந்தாட்ட அணி முடிசூடப்பட்டதன் பின்னர் தேசிய வலைப்பந்து அணியை மேலும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில், தேசிய விளையாட்டுகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளமைக்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான சிரேஷ்ட தேசிய செம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டத்திற்கு தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

குறித்த சிரேஷ்ட தேசிய வலைப்பந்து போட்டிகள் 2023 பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெறும், தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 2023 பெப்ரவரி 13 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும். செம்பியன் கிரீடத்திற்காக 35 க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிடும் இப்போட்டிகள் 2023 ஆண்டில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட அணிக்கான முதன்மையான திறமையாளர்களை தேசிய வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் அடையாளம் காண்பதற்கான போட்டியாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். மேற்படி உலகக்கிண்ண போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் ஜூலை 28 முதல் ஒகஸ்ட் 6 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதன்மை அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை thepapare.com, Dialog ViU மொபைல் App மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் Dialog TV அலைவரிசை இலக்கம் 140 இல் நேரடியாகக் காண்பிக்கப்படும்.

"கடந்த சில வருடங்களில், இலங்கை வலைப்பந்தாட்ட அணியானது சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது, மேலும் எங்களுடன் ஒரு மதிப்புமிக்க பங்காளியாக இருப்பதையிட்டு டயலொக் ஆசிஆட்டாக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகின்றேன்," என்று இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் (NFSL) தலைவி லக்ஷ்மி விக்டோரியா தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "ஆசிய செம்பியன்ஷிப் மகுடத்தை வென்றமை இலங்கை வலைப்பந்து அணியின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கைக்கு மிகப் பெரிய ஓர் ஊக்கியாக இருந்தது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக செம்பியன்ஷிப் போட்டிகளின் போதும் இந்த கட்டமைக்கப்பட்ட வேகம் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.

"இலங்கையின் திறமைகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டுத்தாபனமாக, விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடும் எதிர்கால திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அளவிலான போட்டியை நடத்துவதற்கு NFSL உடன் கைகோர்த்ததையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம்" என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடகப்பிரிவு உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க தெரிவித்தார். "இலங்கைக்கு ஆசிய வலைப்பந்தாட்ட மகுடங்களை மீண்டும் கொண்டு வந்தமைக்காக NFSL இன் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் தேசிய வலைப்பந்தாட்ட செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது, மெர்கன்டைல் வலைப்பந்து சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எச்என்பி (HNB) வலைப்பந்து அணி விமானப்படை அணியை 49-47 என்ற கணக்கில் தோற்கடித்து கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பரா விளையாட்டுகள், மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது.