பொருள் விரிவாக்கம்

100,000க்கும் மேற்பட்ட கோவிட்–19 நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வெற்றிகரமாக நிர்வகித்து, ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் 1390 திட்டம்

நவம்பர் 21, 2021         கொழும்பு

 

1390 powered by Dialog, BOC and Wavenet

கோவிட்-19 ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்புத் தீர்வு, சுகாதார அமைச்சினால் (MOH) கருத்துருவாக்கம் செய்யப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த வாரம் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளர்களுக்கான சிகிச்சையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியவை ஆதரவினை வழங்கியதுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை வங்கி மற்றும் Wavenet இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிட்டட் ஆகியவற்றால் இயக்கப்பட்டது.

1390 - கட்டணமற்ற மும்மொழியிலான துரித இலக்கம் மற்றும் நோயாளர் மேலாண்மை அமைப்பு என்பன, PCR/ RAT பரிசோதனைகளில் தொற்றுறுதியான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்தவாறான பராமரிப்புக்களை நிர்வகிக்க ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தினூடாக செயல்படுத்துவதில் சுகாதார அமைச்சிற்கு (MOH) ஆதரவளிப்பதற்காக தொடங்கப்பட்டது. கட்டணமற்ற 1390 துரித இலக்கம் மற்றும் ஏனைய அனைத்து இணைப்புத் தேவைகளுக்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குகிறது, நோயாளர் மேலாண்மை அமைப்பிற்கு Wavenet இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிட்டட் அனுசரணை வழங்குவதுடன், அழைப்பு மையமானது இலங்கை வங்கியின் அனுசரனையில் செயற்படுகிறது. நோயாளர் மேலாண்மைத் திட்டமானது சிறப்பு மருத்துவ ஆலோசகர்களால் வழிநடத்தப்பட்டது. தனிப்பட்ட பராமரிப்பு/ கவனிப்பை வழங்க சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் 600 க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற மருத்துவர்கள் GMOA இன் ஒருங்கிணைப்புடன் நியமிக்கப்பட்டனர்.

1390 ஒருங்கிணைந்த வீட்டு அடிப்படையிலான பராமரிப்புத் திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாடானது, கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, வைரஸின் புதிய புறழ்வுகளின் பரவலுடன் மருத்துவமனைகளின் பராமரிப்பு அமைப்புகளுக்கான மேலதிக சுமையைக் குறைத்துள்ளது. அறிகுறியற்ற மற்றும் குறைவான ஆபத்தை எதிர்நோக்கும் நோயாளர்களை தொலைநிலையிலிருந்தவாறே நிர்வகிப்பதற்கான தளத்தை வழங்குவதன் மூலம், முன்னணி சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களின் வேலைச்சுமையைக் குறைப்பதிலும் இம்முறைமை வெற்றிகரமாகச் செயற்பட்டது. இத்தீர்வுத் திட்டமானது சுகாதாரப் பணியாளர்களால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நோயாளரின் தரவு மேலாண்மையின் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க உதவியமையால், நோயாளர்களுக்கு வீட்டு அடிப்படையிலான பராமரிப்பை நிர்வகிப்பதில் பதிவு செய்தல் மற்றும் பராமரிப்பு நேரம் ஆகியவற்றை செயற்படுத்துவது இலகுவாக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், 1390 என்ற கட்டணமற்ற மும்மொழி துரித இலக்கம் பொது மக்களுக்கு கோவிட்-19 தொற்றுறுதியானவர்கள் சுகாதார அமைச்சின் தரவுத்தளத்தில் தங்களை பதிவு செய்யும் வசதியினையும் வழங்குகிறது, எனவே பரிசோதனைகளில் தொற்றுறுதியான நோயாளர்கள் உள்ளூர் பொது சுகாதார அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரியிடம் இன்னும் தங்களை பதிவு செய்துகொள்ளவில்லையாயின், அவர்கள் 1390 ஐ அழைத்து, சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி தங்கள் வீட்டிலிருந்தவாறே வசதியான மற்றும் பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெற வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு தீர்வுடன் தங்களை பதிவு செய்துகொள்ளலாம். இது நோயாளர்களை நிர்வகித்தலில் புதிய மையமாக உருவாகி வருகிறது.

இந்த தருணத்தில் உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அவர்கள் “1390 வீட்டு அடிப்படையிலான பராமரிப்புத் தீர்வு, கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் மற்றும் MOH சார்பாக நாட்டின் முயற்சிகளுக்கு ஒரு துணைப்பொருளாகப் பங்காற்றுகிறது. இந்தத் திட்டத்தினை வெற்றியடையச் செய்த சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் இந்நேரத்தில் அங்கீகரிக்க விரும்புகின்றேன். அதேவேளை, நோயாளர் முகாமைத்துவ அமைப்பை இயக்குவதற்கு அனுசரணை வழங்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை வங்கி, Wavenet International, GMOA மற்றும் WHO ஆகிய நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த தேசிய முன்முயற்சி நாட்டிற்கு ஒரு சொத்தாகும், மேலும் இந்த தரப்புகளின் கூட்டு முயற்சிகள் நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாட்டின் முன்னேற்றத்திற்கு கணிசமான அளவில் உதவுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இலங்கையருக்கும் ஆரம்ப சுகாதார அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக அமையும்” என்றார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த GMOAவின் தலைவர் கலாநிதி அனுருத்த பாதெனிய அவர்கள், “இன்றைய நிலவரப்படி, 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயின்முறை மருத்துவர்கள் 100,000 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்களை அந்தந்த வீடுகளில் இருந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீவிரமாகக் கவனித்துள்ள அதே நேரத்தில் முறையான பதிவு அமைப்பு மற்றும் மருத்துவப் படிநிலையைப் பேணுகிறார்கள் என்பதை தெரிவிப்பதில் GMOA மகிழ்ச்சியடைகிறது. இன்றும், வரும் காலத்திலும் கோவிட் நோயை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான மேம்பட்ட அமைப்பைப் பேணுவதன் மூலம் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் உயர்மட்ட கோவிட் நோயாளர் கண்காணிப்பு அமைப்பை உயிர்ப்பிக்க GMOA க்கு ஆதரவளிக்கும் டயலொக் ஆசிஆட்டா, இலங்கை வங்கி மற்றும் Wavenet International ஆகியவற்றின் கூட்டுப் பலத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” எனக் கூறினார்.

அத்துடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “கோவிட்-19 ஒழிப்பு முயற்சிகளுடன் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கு மேலதிக ஆதரவை வழங்குவதற்கு வாய்ப்பளித்த சுகாதார அமைச்சிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். Wavenet International, இலங்கை வங்கி மற்றும் GMOA ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவற்றின் ஒருங்கிணைந்த பலம் தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு முயற்சிகள் மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் தற்போதைய உறுதிப்பாட்டை மேலும் மேம்படுத்த பெரிதும் உதவியது.” எனக் குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த திட்டத்தின் கீழ் 100,000 வீட்டுப் பராமரிப்பு நோயாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், இலங்கை வங்கியில் உள்ள நாங்கள், எங்கள் பங்காளர்களான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் Wavenet International ஆகியவற்றுடன் இணைந்து எங்களின் இந்த சாதனை குறித்து மிகவும் பெருமையடைகிறோம். எதிர்காலத்தில், இந்தச் சேவையை, கோவிட்க்குப் பிந்தைய சமூக சுகாதார மையமாக ஒருங்கிணைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தச் சிறந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், GMOA மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்நேரத்தில் நான் கடமைப்பட்டுள்ளேன்.” எனக் கூறினார்.

Global Wavenet இன் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் பின்டோ அவர்கள் “Wavenet ஆனது, டயலொக் ஆசிஆட்டா மற்றும் இலங்கை வங்கி உடன் இணைந்து முழு தேசத்தின் சுகாதாரத் தேவைகளையும் ஆதரிக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடனான தனது கூட்டாண்மையின் வழியே ஒரு வலுவான மற்றும் அத்தியாவசியமான சேவையை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இலங்கையில் சுகாதார தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்கான எமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாக விளங்குகிறது.” என்று கூறினார்.