பொருள் விரிவாக்கம்

Dialog இன் அனுசரணையில் ‘89வது புனிதர்களின் சமர்’

ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது

2023 ஏப்ரல் 20         கொழும்பு

 

Battle of the Blues 2023

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மற்றும் குழு வர்த்தக நடவடிக்கைகள் லசந்த தெவெரப்பெரும போட்டிக்கான அனுசரணை காசோலையை புனித.ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரஞ்சித் அந்தராடி மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித்த ரொட்ரிகோ ஆகியோரிடம் கையளித்தார்.

படத்தில் இடமிருந்து வலமாக : புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் சதேஷ் ஜெயவர்த்தன, புனித ஜோசப் கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் அருட்தந்தை ப்ரியன் திசேரா, புனித.ஜோசப் கல்லூரியின் கூட்டு ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் டெரன்ஸ் பெர்னாண்டோ, புனித பீட்டர்ஸ் கல்லூரியின் கூட்டு ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் மைக்கேல் எலியாஸ், புனித பீட்டர்ஸ் கல்லூரியின் போட்டி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மிலன் பேர்னார்ட், புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியின் தலைவர் நிமுத்து குணவர்தன.

இலங்கையின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளுள் ஒன்றான 89 வது வருடாந்த 'புனிதர்களின் சமர்' கிரிக்கெட் போட்டி, Dialog Axiata PLCஇன் அனுசரணையில் முதன்மையான கத்தோலிக்க ஆண்கள் கல்லூரிகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி ஆகியவற்றிற்கிடையே ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான மேற்படி கிரிக்கெட் போட்டியானது, கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் - 19 பெருந்தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்டக்காரர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளிக்கும் விதமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாத அரங்கிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன, இருப்பினும் தற்போது கொவிட் - 19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையால் 89வது 'புனிதர்களின் சமர்' போட்டிகளுக்கான கூட்டு ஏற்பாட்டுக் குழுவினர் இரண்டு கல்லூரிகளினதும் பாதிரியார்/அதிபர்மார்களின் வழிகாட்டுதலின் கீழ் இம்முறை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் கண்டுகளிக்கும் வகையில் போட்டிகளை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

பிரதம அனுசரணையாளரான Dialog Axiata, போட்டிகளை நேரலையாக கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி Dialog Television அலைவரிசை எண் 70, Thepapare.com மற்றும் Dialog ViU app ஊடாக போட்டிகளை நேரலையாக கண்டுகளிக்கலாம்.

'புனிதர்களின் சமர்' அதன் போட்டித் தன்மைக்கு மிகவும் புகழ்பெற்றது, ஏனெனில் போட்டியின் முதல் இன்னிங்ஸ் 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுவதால், இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியானது முடிவை எட்டும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதற்கமைய இம்முறை போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரும் மற்றும் இலங்கையின் 19 வயதிற்கு கீழானோருக்கான அணியில் இடம்பெற்றுள்ளவருமான சதீஷ் ஜெயவர்தன தலைமை தாங்குவதுடன், புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிக்கு துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான நிமுத்து குணவர்தன தலைமை தாங்குகின்றார்.

"ஜோ-பீட் போட்டிகள் கிரிக்கெட்டின் தனித்துவமான அடையாளத்திற்கு பிரபலமானது, மேலும் நமது நட்புறவின் வெளிப்பாடான 89 ஆவது போட்டி இம்முறை கொவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நடைபெறுவதால் அதன் கடந்தகால மகிமையில் விளையாடக்கூடியதாக அமைந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ரோஹித ரொட்ரிகோ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "சாதகமான மற்றும் சவாலான காலங்களில் எங்களுடன் இருந்ததற்காக எங்களின் நீண்டகால கூட்டாளர்களான டயலொக் ஆசிஆட்டாவிற்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்" எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ரஞ்சித் அந்தராடி தெரிவிக்கையில்,“புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் இலங்கையின் இரு முன்னணி கத்தோலிக்க கல்லூரிகளான புனித பீட்டர்ஸ் மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கிடையிலான இப்போட்டி மிக நீண்டதும் செழுமையானதுமான வரலாற்றை கொண்டது. இவர்களின்ஆட்டம் இரு கல்லூரிகளினதும் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களிடத்தில் உற்சாகத்தை கொண்டுவரும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.இரு பாடசாலைகளும் அவற்றின் அணித்தலைவர்களும் இரண்டு நாட்களும் எமக்கு சுவாரஸ்யமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

புனிதர்களின் சமர் போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி தொடரில் 12 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது, அவர்களின் கடைசி வெற்றியானது 2008 இல் ருவந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையில் கிடைத்திருந்தது, அதேவேளை புனித பீட்டர்ஸ் கல்லூரி வினு மொஹொட்டியின் தலைமையில் 2016 போட்டியில் கடைசி வெற்றியை பெற்றிருந்தது இது அவர்களின் 10 ஆவது மொத்த வெற்றியாக அமைந்தது. அதற்கமைய மேற்படி அருட்தந்தை மொரிஸ் ஜே. லெகோக் கிண்ணமானது பம்பலப்பிட்டியில் புனித பீட்டர்ஸ் கல்லூரியின் காட்சி அலுமாரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதான 50 ஓவர்களைக் கொண்டதும் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியாகவும் கருதப்படுவது அருட்தந்தை பீட்டர் ஏ. பிள்ளை ஞாபகார்த்த கிண்ணத்திற்கான' ஜோசப் -பீட்டர்ஸ் அணிகளுக்கிடையில் 1975இல் நடைபெற்ற போட்டியே ஆகும். பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எப்போதும் அதிக பார்வையாளர்களை ஈர்த்த ஒரு போட்டியாக அமைந்துள்ள ஒரு போட்டியாகும். அந்த வரிசையில் இம்முறையும் 50 ஓவர்களை கொண்ட புனித ஜோசப் -புனித பீட்டர்ஸ் ஒரு நாள் போட்டி 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்ஸி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி 24-21 என கணக்கில் முன்னிலையில் உள்ள அதேவேளை 2 போட்டிகள் முடிவு ஏதுமின்றியும் 1 போட்டி சம நிலையிலும் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் புனித பீட்டர்ஸ் அணியினர் புனித ஜோசப்ஸ் அணியினருக்கு கடுமையான போட்டியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இரண்டு கல்லூரிகளும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளமை சிறப்பம்சமாகும். அதன்படி இலங்கையின் தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன உட்பட ஏஞ்சலோ மெத்யூஸ், சமிந்த வாஸ், துனித் வெல்லகே, திசர பெரேரா, ஆஷ்லி டி சில்வா, மைக்கல் வென்டோர்ட், ரொஷேன் சில்வா, பிரியமல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜோசபியன்கள் ஆவர். மேலும்,ரோய் டயஸ், ரொமேஷ் ரத்நாயக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, ரசல் ஆர்னோல்ட், கௌஷல் லொக்குஆராச்சி, மலிந்த வர்ணபுர மற்றும் ஏஞ்சலோ பெரேரா. ஜனித் லியனகே ஆகியோர் பீட்டரைட்கள் ஆவர்.

ஜனதா ஸ்டீல் (Janatha Steel) இம்முறை 2023 ஆம் ஆண்டு பதிப்பிற்கான பிளாட்டினம் அனுசரணையாளராக 'ஜோபீட்' போட்டிகளை வலுப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி JoePete 2023 போட்டி பதிப்பு இன்னும் பல அனுசரணையாளர்களை உள்வாங்கியுள்ளது அதில் Keells Krest, Elephant house, CBL, Maggie, Daraz, HNB, Uber மற்றும் Singer Sri Lanka ஆகியன குறிப்பிடத்தக்கன. தற்போது புனித ஜோசப் 19 வயதுக்குட்பட்ட அணியினர் பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு 1 A 2 நாள் போட்டி இணை செம்பியன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் இலங்கை தேசிய கரப்பந்தாட்டம், வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.