டயலொக் MAS Enabler நிகழ்ச்சித்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பணித்தள உள்ளடக்கத்தை முன்னிறுத்துகிறது
2025 ஜூலை 25 கொழும்பு

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் MAS Holdings இன் பிரதிநிதிகள் 2025 Enabler நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் இணைந்து.
இலங்கையின் நம்பர் 1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமான MAS Holdings உடன் இணைந்து, தொடர்ச்சியாக மூன்றாவது டயலொக் MAS Enabler நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது பணித்தள உள்ளடக்கத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும், நிஜ உலக பெருநிறுவன, உற்பத்தி மற்றும் சேவைச் சூழல்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட வெளிப்பாடு மூலம் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஜூன் 23 முதல் ஜூலை 7, 2025 வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற்ற இத்திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு டயலொக் மற்றும் MAS நிறுவனங்களில் அனுபவம் பெற வாய்ப்பளித்தது. பங்கேற்பாளர்கள் பெருநிறுவன அலுவலகங்கள், சேவை மையங்கள் மற்றும் உற்பத்தி வசதிகளில் நேரடியாக ஈடுபட்டு, நிறுவன கலாச்சாரம் குறித்த விளக்கங்களையும், இரு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த நேரடி அனுபவத்தையும் பெற்றனர். கோட்பாடு மற்றும் நடைமுறை அனுபவங்களை ஒருங்கிணைத்த இந்த அமர்வுகள், பணித்தள ஒழுக்கம், பணியமர்த்தல் செயல்முறை, நேர்காணல் தயாரிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட மன்றங்கள் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியிருந்தன. தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அறிவுடன், பங்கேற்பாளர்கள் தகவல்தொடர்பு, குழுப்பணி மற்றும் தலைமைத்துவம் போன்ற அத்தியாவசிய மென்திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். இவை நீண்டகால தொழில்முறை வளர்ச்சிக்கும், மாறும் பணிச்சூழல்களில் ஒன்றிணைவதற்கும் ஆதரவளிக்கும் முக்கிய திறன்களாகும்.
கடந்த ஆண்டு முன்முயற்சியின் ஒரு படியாக, மாற்றுத்திறனாளிகளை சாத்தியமான தொழில் வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் ஒரு முன்னோடி வேலைக்கு முந்தைய பயிற்சித் திட்டத்தை டயலொக் தனது அழைப்பு மையத்தில் அறிமுகப்படுத்தியது. அத்துடன், நிறுவனம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கத்திற்கான உள் விழிப்புணர்வையும், வலுவான ஆதரவையும் மேம்படுத்தும் வகையில் 'Inclusive Champions நிகழ்ச்சித்திட்டம்' தொடங்கப்பட்டது.
“இந்த நிகழ்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகளை யதார்த்தமான பணிச்சூழல்களில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும். இதன் மூலம் அவர்கள் பணித்தளக் கலாசாரம், அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் ஒரு தொழில்முறை அமைப்பின் எதிர்பார்ப்புகள் பற்றிய ஆழமான நுண்ணறிவைப் பெறுகின்றனர். இது கல்விசார் கற்றலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் தொழிலை வடிவமைத்து மேம்படுத்துவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தெளிவான புரிதலைப் பெற உதவுகிறது. உள்ளடக்கத்தை வெறும் கொள்கையாக வைத்திருக்காமல், அதனை செயலுருப்படுத்தும் ஒரு முயற்சியில் பங்காளியாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என MAS Holdings இன் குழும நிலைபேறுடைய வணிகப் பணிப்பாளர் நேமந்தி கூரகமகே தெரிவித்தார்.
“டயலொக் MAS Enabler நிகழ்ச்சித்திட்டம் உள்ளடக்கத்திற்கான எங்கள் நோக்கம் சார்ந்த அணுகுமுறையை பிரதிபலிக்கிறது - இது மாற்றுத்திறனாளிகளை அர்த்தமுள்ள தொழில்களுக்கு தயார்படுத்தும் வெளிப்பாடு, வழிகாட்டுதல் மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்குகிறது. இந்த முக்கியமான முன்முயற்சியை முன்னெடுப்பதிலும், இலங்கையில் பணித்தள சமத்துவம் மற்றும் அணுகல்தன்மைக்கான ஒரு அளவுகோலை அமைப்பதிலும் MAS Holdings உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதம பெருநிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன தெரிவித்தார்.
டயலொக் மற்றும் MAS ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள், எந்தவித திறமைப் பாகுபாடும் இன்றி, அனைத்து தனிநபர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படும் வகையில், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பணிச்சூழல்களை உருவாக்குவதில் ஆழமான உறுதிப்பாட்டுடன் திகழ்கின்றன. நிஜ உலக அனுபவம் மற்றும் அர்த்தமுள்ள வழிகாட்டுதலை இணைப்பதன் மூலம், இரு நிறுவனங்களும் தொடர்ந்து ஒரு முறையான மாற்றத்தை உருவாக்கி, பிரதிநிதித்துவமற்ற திறமைகளை மேம்படுத்தி, இலங்கை முழுவதும் ஒரு உள்ளடக்கிய பெருநிறுவன கலாச்சாரத்தை வளர்ப்பதில் எடுத்துக்காட்டாக வழிநடத்துகின்றன.