பொருள் விரிவாக்கம்

Sayuru App மூலம் பகல்நேரப் படகு மீனவர்களுக்கு அளவீட்டுக் காப்பீட்டுத் தீர்வுகளை டயலொக் மற்றும் HNB General Insurance இணைந்து அறிமுகப்படுத்துகின்றன

2025 ஜூலை 18         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

படத்தில் இடமிருந்து வலமாக: திரு. தில்ஷான் பெரேரா, பிரதம மாற்றியமைப்பு அதிகாரி, HNB General Insurance; திரு. சித்துமின ஜயசுந்தர, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, HNB General Insurance; திரு. சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ; திரு. அசங்க பிரியதர்ஷன, குழும பிரதம நிறுவன அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டின் பிரதான காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான HNB ஜெனரல் இன்சூரன்ஸுடன் ஒரு முக்கிய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியின் நோக்கம், தீவிர காலநிலையால் மீனவர்கள் சந்திக்கும் நிதி அபாயங்களைக் குறைப்பதாகும்.

இதற்காக, 'அளவீட்டுக் காப்பீட்டுத் தீர்வு' (Parametric Insurance) டயலொக்கின் 'Sayuru' செயலி மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வானிலை ஆய்வுத் துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து டயலொக் உருவாக்கிய இந்தச் செயலி, ஏற்கனவே மீனவர்களுக்கு நிகழ்நேர வானிலை எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது.

தற்போது, இந்தக் கூட்டாண்மையின் மூலம், சூறாவளி போன்ற காலங்களில் கடலுக்குச் செல்ல முடியாத பகல்நேரப் படகு மீனவர்களுக்கு நேரடி நிதி இழப்பீடு வழங்கப்படும். இது அவர்களின் வருமானத்தைப் பாதுகாத்து, கடலோர சமூகங்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாகும்

HNB General Insurance இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், "இந்தக் கூட்டு, அளவீட்டுக் காப்புறுதியின் வரம்பை விரிவுபடுத்துவதற்கும், தீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அர்த்தமுள்ள நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவுகிறது. இந்த புதிய காப்பீட்டுத் துறையில் முன்னோடியாகக் களமிறங்கிய முதல் உள்ளூர் காப்பீட்டாளர் என்ற வகையில், இந்தக் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்குத் தலைமை தாங்குவதிலும், காப்பீடு நம் மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்பதைப் புதியதாய் வரையறுப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்."என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், கடும் வானிலை காலங்களில் மீனவர்கள் சந்திக்கும் பணக்கஷ்டங்களைக் குறைக்கவும், கடலோர சமூகத்தினரிடையே நிதிச் சேவைகளை பரவலாக்கவும் டயலொக் முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி, மீன்பிடித் துறையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் 'Sayuru' செயலி வழியாக தமது காப்புறுதியை சுலபமாகவும் பாதுகாப்பாகவும் நிர்வகிக்கலாம். மேலும், நிகழ்நேர வானிலை எச்சரிக்கைகளை வழங்கி, மீனவர்கள் அறிவார்ந்த, பாதுகாப்பான முடிவுகளை எடுக்க உதவுவதன் மூலம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்முயற்சி, சவாலான வானிலை நிலமைகளின் போது பகல்நேரப் படகு மீனவர்களுக்கு முக்கிய நிதிப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் கடற்றொழில் துறையில் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் எவ்வாறு நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கான ஒரு அளவுகோலாகவும் அமைகிறது. வானிலை முன்னறிவிப்பை நிதித் தீர்வுகளுடன் இணைப்பதன் மூலம், டயலொக் ஆசிஆட்டா மற்றும் HNB General Insurance ஆகியவை இலங்கையில் காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அதேவேளை, பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டையும் வலுப்படுத்துகின்றன.