பொருள் விரிவாக்கம்

கொழும்பில் உலகக் கிண்ணச் சுற்றுப்பயணம் ஆரம்பம்: டயலொக் தலைமையகத்தை வந்தடைந்தது ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம்

2026 ஜனவரி 23         கொழும்பு

 

யமித் அனுராத (தயாரிப்பு முகாமையாளர் – விளம்பர ஊடகம் மற்றும் Home , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), புபுது அளுத்கெதர (வணிகத் தலைவர் – ஊடகம் மற்றும் Home , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), லசந்த தெவரப்பெரும (குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), சுபுன் வீரசிங்க (குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), உபுல் நவரத்ன பண்டார (சந்தைப்படுத்தல் தலைவர், ஸ்ரீலங்கா கிரிக்கெட்) மற்றும் ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் – குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி).

2026 ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணத் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கும் இலங்கை ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில், கிரிக்கெட் உலகின் உயரிய வெற்றிச் சின்னமாக விளங்கும் உலகக் கிண்ணம், ஜனவரி 23 அன்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமையகத்தை வந்தடைந்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இந்த மைல்கல் நிகழ்வை முன்னின்று நடத்தியமை, இலங்கையில் உலகக் கிண்ணக் கொண்டாட்டத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் உலகின் இந்த உயரிய வெற்றிச் சின்னத்தின் வருகை, ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பல மடங்கு அதிகரிப்பதோடு, தேசிய விளையாட்டுடன் டயலொக் கொண்டுள்ள பிரிக்க முடியாத பந்தத்தையும் மீண்டும் ஒருமுறை உலகுக்குப் பறைசாற்றியது.

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணத் தொடர், எதிர்வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இரு நாடுகளிலும் அமைந்துள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா, அதிரடி ஆட்டங்களும் பரபரப்பான தருணங்களும் நிறைந்த ஒரு புதிய உற்சாகத்தை ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ICC உலகக் கிண்ணம், கிரிக்கெட் விளையாட்டின் வேகம், நவீனத்துவம் மற்றும் உலகளாவிய ஈர்ப்பை பிரதிபலிக்கும் முக்கியச் சின்னமாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த விறுவிறுப்பான விளையாட்டு வடிவத்தின் பரிணாம வளர்ச்சியையும் அதன் பிரபலத்தையும் இக்கிண்ணம் பிரதிபலிக்கிறது. டயலொக் தலைமையகத்தில் உலகக் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டமை, நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களிடம் கிரிக்கெட்டின் உற்சாகத்தை கொண்டு சேர்ப்பதில் அந்நிறுவனம் வகிக்கும் முக்கியப் பங்கை மேலும் உறுதிப்படுத்தியது.

இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகாலப் பங்காளராக விளங்கும் டயலொக்கிற்கு, இவ்வுலகக் கிண்ணத்தின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நேரடி ஒளிபரப்புகள், முன்னேற்றமான டிஜிட்டல் தளங்கள் மற்றும் பல்வேறு களச் செயற்பாடுகள் மூலம், ரசிகர்கள் கிரிக்கெட்டை அனுபவிக்கும் முறையை டயலொக் புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம், தீவு முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை எப்போதும் எளிதாகவும் இடையறாத முறையிலும் அணுகக்கூடியதாக மாற்றி, விளையாட்டுடன் அவர்களுடைய தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பல ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணப் போட்டியின் இலங்கைக்கான பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமைகளை டயலொக் பெற்றுள்ளது. ரசிகர்கள், உலகத் தரம் வாய்ந்த இந்தப் போட்டிகளை Dialog Television மற்றும் Dialog Play App ஊடாக தங்களது இல்லங்களிலிருந்தே live ஆகக் கண்டு ரசிக்க முடியும். மேலும், Supreme TV உடனான இலவச ஒளிபரப்பு (Free-to-Air) கூட்டாண்மையின் மூலம், இந்தத் தொடர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது.

டயலொக் தலைமையகத்திலிருந்து புறப்படும் உலகக் கிண்ண வெற்றிச் சின்னம், அதனைத் தொடர்ந்து கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்குத் தனது தீவு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இச்சுற்றுப்பயணம் ரசிகர்களுக்கு உலகக் கிண்ணத்தை மிக அருகில் காண்பதற்கும், அந்த நினைவுகளைப் படம்பிடித்துக் கொள்வதற்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

2026 ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணத் தொடர் நெருங்கி வரும் வேளையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் எல்லையற்ற ஆர்வத்தோடு இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவைக் கொண்டாட இலங்கையே தயாராகிக் கொண்டிருக்கிறது.