eZ Cash மற்றும் Dialog Finance ஊடாக பணமில்லா பரிமாற்றங்களை அனைவருக்கும் இலவசமாக்கும் ‘GanuDenu QR’ சேவையை டயலொக் அறிமுகப்படுத்துகிறது
2026 ஏப்ரல் 06 கொழும்பு
இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MyDialog App ஊடாகப் பயன்படுத்தக்கூடிய ‘GanuDenu QR’ எனும் புதிய கட்டணத் தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை தொடர்ந்தும் வடிவமைத்து வருகின்றது. இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புத்தாக்கமான சேவையானது, வாடிக்கையாளர்கள் தங்களது Dialog Finance மற்றும் eZ Cash கணக்குகூடாக உடனடியான பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இது வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் QR கொடுப்பனவுகளுக்கு அப்பால், தனிநபர்களுக்கிடையிலான பணப்பரிமாற்றங்களையும் QR ஊடாக மேற்கொள்ள வழிவகுப்பதன் மூலம் இலங்கையை ஒரு பணமில்லா, டிஜிட்டல் உள்ளடக்கிய சமூகமாக மாற்றுவதற்குத் துணைபுரிகிறது.
இலங்கையில் அதிகரித்து வரும் QR முறையிலான கொடுப்பனவுகள் மற்றும் பணப்பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘GanuDenu QR’ ஒரு எளிய QR குறியீட்டின் மூலம் தனிநபர்களுக்கிடையே தடையற்ற பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையின் மூலம் பயனர்கள் 5,000 ரூபா வரையான பணப்பரிமாற்றங்களை எந்தவித கட்டணமுமின்றி மேற்கொள்ள முடியும். இது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகங்களுக்கு இடையே செலவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், சிறிய அளவிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. எளிய, பாதுகாப்பான மற்றும் உடனடி (Real-time) தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சேவை, பணத்தின் தேவையின்றி டிஜிட்டல் முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதை எளிதாக்குகிறது. ‘GanuDenu QR’ சேவையானது LankaPay வலையமைப்பின் ஊடாக அனைத்து மத்திய வங்கி அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் (Interoperable) தன்மையைக் கொண்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GanuDenu QR’, பாரம்பரிய புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரு சிறந்த டிஜிட்டல் மாற்றீடாக அமைவதுடன், பண்டிகைக் காலத்திற்கு அப்பாலும் அதன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி-யின் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்: “டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஒரு வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று டயலொக் நம்புகிறது. ‘GanuDenu QR’ அறிமுகத்தின் மூலம், இலங்கையில் QR கொடுப்பனவுகளின் எல்லையை வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பால் விரிவுபடுத்தி, தனிநபர்கள் தங்களுக்குள் எளிதாகப் பணப்பரிமாற்றம் செய்துகொள்ள வழிவகை செய்துள்ளோம். இந்தத் தளத்தை உருவாக்குவதற்கு ஆதரவளித்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் LankaPay ஆகியவற்றிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக 5,000 ரூபா வரையான பரிமாற்றங்களுக்கு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டமையானது, இலங்கையில் பணமில்லா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய ஒரு அர்த்தமுள்ள முதல் படியாகும்.” என்றார்.
டிஜிட்டல் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் தனது தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்தும் வகையில், டயலொக் தொடர்ந்தும் டிஜிட்டல் சேவைகளை எளிமையாக்கும் தீர்வுகளில் முதலீடு செய்து வருகின்றது. ‘GanuDenu QR’ இன் அறிமுகமானது, தனிநபர்கள் நடைமுறை ரீதியாக டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதை ஊக்குவிப்பதுடன், இலங்கையின் டிஜிட்டல் நிலப்பரப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வலுசேர்க்கிறது.