மக்களின் நல்வாழ்விற்காக அறிவியலின் மீதுள்ள நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முன்னணிப் பெருநிறுவனங்கள் கைகோர்க்கின்றன
2025 ஜூலை 17 கொழும்பு

இடமிருந்து வலமாக : திரு. அஷ்ரோப் உமர், குழும தலைமை நிர்வாக அதிகாரி, Brandix Lanka (Pvt) Ltd; திரு. கிறிஸ்டோபர் ஜோஷ்வா, நிர்வாக துணைத் தலைவர், Access Engineering PLC; திரு. சுபுன் வீரசிங்க, இயக்குநர்/குழும தலைமை நிர்வாகி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; பேராசிரியர் அஜித் அபேசேகர, தலைவர், NASSL; பேராசிரியர் கோமிகா உதயகமசூரியா, அதிமேதகு ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்; பேராசிரியர் மாலிக் ரணசிங்க, துணைத் தலைவர், NASSL; திரு. ஹஸ்ரத் முனசிங்க, CSR நம்பிக்கை நிதியாளர் / இலங்கை வர்த்தக வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர், Commercial Bank of Ceylon PLC.
தேசிய வளர்ச்சிக்கு தனியார் துறை வழங்கும் மகத்தான ஆதரவின் வெளிப்பாடாக, Access Engineering PLC, Brandix Lanka (Pvt) Ltd., Commercial Bank of Ceylon PLC, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் TV Derana ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இலங்கை தேசிய அறிவியல் அகாடமி (NASSL) மற்றும் இலங்கை அறிவியல் மேம்பாட்டு சங்கம் (SLAAS) உடன் கைகோர்த்து, "அறிவியலில் நம்பிக்கையை மீளுருவாக்குதல்" (Rebuild Trust in Science) என்ற மூன்று வருட தேசிய அளவிலான பொது ஈடுபாட்டுத் திட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இதன் முக்கிய நோக்கம், அறிவியலின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் எவ்வாறு உதவ முடியும் என்பதை எடுத்துரைப்பதும் ஆகும்.
இந்த முயற்சியின் நீண்டகால தொலைநோக்கு பார்வையை நோக்கி ஒவ்வொரு மூலோபாய பங்காளரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் வகையில், NASSL உடனான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் ஜூலை 1, 2025 அன்று எலிவேட், Access Tower II இல் நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கையெழுத்தாகின. அறிவியல், புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பின் துணையுடன் தேசிய முன்னேற்றத்திற்கான ஒரு பகிரப்பட்ட உறுதியை வெளிப்படுத்த, அனைத்துப் பங்காளி நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகளும் விஞ்ஞான சமூகமும் இந்த நிகழ்வில் ஒன்றுகூடின.
ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2028 வரை நடைபெறவுள்ள, 'அறிவியலில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும்' (Rebuild Trust in Science) முயற்சி NASSL ஆல் வழிநடத்தப்படுகிறது. SLAAS ஒரு பங்காளராகவும் இணை ஊக்குவிப்பாளராகவும் இதில் செயற்படுகிறது. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை, ஆற்றல்மிக்க மற்றும் அணுகக்கூடிய விளம்பர நடவடிக்கைகளின் மூலம் ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும். இவற்றுள் அறிவியல் தின நிகழ்வுகள், கண்டுபிடிப்பு கண்காட்சிகள், புத்தாக்கப் போட்டிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் TV Derana இல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அத்தியாயங்கள் என்பன அடங்கும். அறிவியல் எவ்வாறு மக்களுக்கும் நாட்டிற்கும் செல்வத்தை உருவாக்குகிறது என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
ஒவ்வொரு பெருநிறுவனப் பங்காளரும் இந்த முன்முயற்சியின் நான்கு முக்கிய உந்துதல் துறைகளில் ஒன்றிற்கு முழுமையாகப் பங்களிக்கின்றனர். தங்கள் தனிப்பட்ட நிபுணத்துவத்தை, தேசிய விஞ்ஞான இலக்குகளுடனும், மக்களுக்கான அறிவியல் தலைமையிலான செல்வ உருவாக்கத்தின் பகிரப்பட்ட இலக்குடனும் ஒத்திசைத்துச் செயல்படும் வகையில், Access Engineering PLC, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும், Brandix Lanka (Pvt) Ltd நிலைத்தன்மை மற்றும் ஆலோசனை சேவைகளிலும், Commercial Bank of Ceylon PLC தொழில்முனைவோரிலும், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அறிவியல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலிலும் கவனம் செலுத்துகின்றன.
இந்தக் கூட்டாளி நிறுவனங்களின் மூலோபாய நிதி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஆதரவின் மூலம், NASSL (இலங்கை தேசிய அறிவியல் அகாடமி) மற்றும் SLAAS (இலங்கை அறிவியல் மேம்பாட்டு சங்கம்) ஆகிய அமைப்புகள் ஒரு புதிய பலத்தைப் பெறும். இதன் விளைவாக, அறிவியல் மக்களை இன்னும் நெருக்கமாகச் சென்றடையும். இது வெறும் ஆய்வுக் கூட அறிவாக மட்டும் இல்லாமல், ஆராய்ச்சிக்கும், புதிய தொழில்களுக்கும், இறுதியாக தேசிய முன்னேற்றத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அறிவியலை நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக்கும்.
இலங்கை தேசிய அறிவியல் அகாடமியின் துணைத் தலைவர் பேராசிரியர் மாலிக் ரணசிங்க அவர்கள், “NASSL ஆல் தொடங்கப்பட்ட, 'இலங்கையில் அறிவியலின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்' என்ற இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் எங்கள் அனைத்து மூலோபாயப் பங்களிப்பு நிறுவனங்களும் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக NASSL மற்றும் SLAAS இணைந்து மேற்கொள்ளும் இந்த விரிவான விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் ஊக்குவிப்புச் செயற்றிட்டங்கள் மூலம், பொதுமக்கள், அரசியல்வாதிகள், மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என அனைவரும், மக்களுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத அறிவியல் விடயங்களில் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை நம்பி ஏற்றுக்கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்தார்.
அறிவியலில் நம்பிக்கையை மீளுருவாக்குதல்" பிரச்சாரத்தின் கீழ், வெகுஜன ஊடக விழிப்புணர்வு முயற்சிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் பல்வேறு கல்வி மற்றும் விளம்பர நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம், அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சேர்ப்பதே எமது நோக்கம்.