Body

டயலொக் அனுசரணையுடன் நடைபெற்ற 'President’s Trophy' ரக்பி கிண்ணத்தை வென்றது Trinity College

2026 ஏப்ரல் 09         கொழும்பு

 

President’s Trophy இறுதிப் போட்டியில் திரித்துவக் கல்லூரி சாம்பியன்
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும (மத்தியில்), திரித்துவக் கல்லூரியின் ரக்பி அணித் தலைவர் ஷான் அல்தாப்பிடம் (இடது) President's Trophy கிண்ணத்தை வழங்குகின்றார். அருகில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கௌரவ அமைச்சர் நாலக கலுவேவ மற்றும் இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு. புத்திக அத்தநாயக்க ஆகியோரையும் படத்தில் காணலாம்.

இலங்கையின் முதன்நிலைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநரும், விளையாட்டுத்துறையின் மாபெரும் ஊக்கப்படுத்துநருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி தொடருக்கு வலுவூட்டுகின்றது.

கடந்த ஆண்டின் வெற்றியைத் தொடர்ந்து, இம்முறைப் பருவத்திற்குரிய போட்டிகளும் Knock-Out தொடருடன் கோலாகலமாக ஆரம்பமாகின. புகழ்பெற்ற President’s Trophy கிண்ணத்திற்காக 16 முன்னணி பாடசாலைகள் போட்டியிட்ட இத்தொடர், 2026 மார்ச் 11 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. கொழும்பின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்ற இந்தப் போட்டிகள், பாடசாலை வீரர்களின் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைந்தன.

Dialog Schools Rugby Knockout தொடரின் இறுதிப் போட்டி, 2026 ஏப்ரல் 04 சனிக்கிழமை அன்று சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ரோயல் கல்லூரியை (Royal College) 58-26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, கண்டி திரித்துவக் கல்லூரி (Trinity College Kandy) President’s Trophy கிண்ணத்தைச் சுவீகரித்தது.

அதேபோல், Premier Trophy கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் தர்மராஜ கல்லூரியை 17-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி லும்பினி வித்தியாலயம் (Lumbini Vidyalaya) வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. Chairman’s Trophy கிண்ணத்திற்கான போட்டியில், கண்டி மதினா தேசிய பாடசாலையை 20-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மஹரகம மத்திய கல்லூரி (Central College Maharagama) சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப் போட்டிக்கான பாதை: இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வழியில், ரோயல் கல்லூரி காலிறுதியில் சென் தோமஸ் கல்லூரியையும் (25-5), அரையிறுதியில் இசிபதன கல்லூரியையும் (39-13) தோற்கடித்தது. மறுபுறம், திரித்துவக் கல்லூரி காலிறுதியில் ஸாஹிரா கல்லூரியையும் (32-23), அரையிறுதியில் வெஸ்லி கல்லூரியையும் (49-29) வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இம்முறை Chairman’s Trophy இறுதிப் போட்டியில் கண்டி மதினா தேசிய பாடசாலையின் எழுச்சி ஒரு முக்கிய மைல்கல்லாகும். Dialog நிறுவனத்தின் அடிமட்ட ரக்பி மேம்பாட்டுத் திட்டங்களின் வெற்றியை இது பறைசாற்றுகிறது.

தற்போது Knock-Out தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக Dialog Schools Rugby League 2026 தொடர் எதிர்வரும் 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 90 பாடசாலைகளைச் சேர்ந்த 2,500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிண்ணத்திற்காகப் போட்டியிடவுள்ளனர்.

இந்த லீக் தொடரினை Dialog Television ஊடாக ThePapare TV (அலைவரிசை 62 & 63) மற்றும் ThePapare TV HD (அலைவரிசை 126 & 127) ஆகியவற்றில் நேரடியாகக் காணலாம். அத்துடன், Dialog Play Mobile App மற்றும் ThePapare.com ஊடாகவும் ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் கண்டுகளிக்க முடியும்.

டயலொக் ஆசிஆட்டா தேசிய கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிகு அனுசரணையாளராகும். டயலொக் Srilanka Golf open மற்றும் தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்கான இலங்கை அணியின் முக்கிய அனுசரணையாளராகவும் உள்ளது. மேலும் நாளைய சாம்பியன்களை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஜனாதிபதி தங்கக் கிண்ண கைப்பந்து, தேசிய இளையோர் மற்றும் மூத்தோர் வலைப்பந்து போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி ஆகியவற்றையும் நிறுவனம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

Dialog Schools Rugby Knockout 2026 – முடிவுகள்

காலிறுதிப் போட்டிகள்:

  • ரோயல் கல்லூரி வெற்றி vs சென் தோமஸ் கல்லூரி — 25–5
  • இசிபதன கல்லூரி வெற்றி vs புனித ஜோசப் கல்லூரி — 22–10
  • திரித்துவக் கல்லூரி வெற்றி vs ஸாஹிரா கல்லூரி — 32–23
  • வெஸ்லி கல்லூரி வெற்றி vs புனித பேதுரு கல்லூரி — 36–29

அரையிறுதிப் போட்டிகள்:
  • ரோயல் கல்லூரி வெற்றி vs இசிபதன கல்லூரி — 39–13
  • திரித்துவக் கல்லூரி வெற்றி vs வெஸ்லி கல்லூரி — 49–29
இறுதிப் போட்டிகள்:
  • President's Trophy: திரித்துவக் கல்லூரி வெற்றி vs ரோயல் கல்லூரி — 58-26
  • Premier Trophy: லும்பினி வித்தியாலயம் வெற்றி vs தர்மராஜ கல்லூரி — 17-10
  • Chairman's Trophy: மஹரகம மத்திய கல்லூரி வெற்றி vs மதினா தேசிய பாடசாலை — 20-19