இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவுத்துறையை மேம்படுத்த டயலொக் மற்றும் UnionPay International கைகோர்ப்பு
2026 ஜனவரி 08 கொழும்பு
இடமிருந்து வலமாக, UnionPay International இன் பணிப்பாளர் ஷெங் ஜின்சுன் , Dialog Finance PLC இன் பணிப்பாளர் மற்றும் முதன்மை நிறைவேற்று அதிகாரி நசீம் முகமது, China UnionPay நிறுவனத்தின் தலைவர் டோங் ஜுன்பெங் Dong Junfeng மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் மற்றும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர். அவர்களுடன் Dialog Finance PLC இன் தலைவரும், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும முதன்மை டிஜிட்டல் சேவைகள் அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ மற்றும் UnionPay International இன் தென்கிழக்கு ஆசியாவிற்கான பொது மேலாளர் சாய் ஹூய்மிங் Cai Huiming ஆகியோரும் உள்ளனர்.
இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் கொடுப்பனவு வலையமைப்புகளில் ஒன்றான UnionPay International உடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. China UnionPay மற்றும் UnionPay International ஆகியவற்றின் தலைவர் திரு. டோங் ஜுன்பெங் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில், UnionPay International இன் சிரேஷ்ட அதிகாரிகளுடன், இலங்கையின் வளர்ந்து வரும் நிதித் தொழில்நுட்ப (FinTech) முன்னோடியான Dialog Finance PLC இன் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக, Dialog Finance நிறுவனம் பல்வேறு புத்தாக்கமான பணப் பரிமாற்ற முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இது நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரத்தை அதிகரிப்பதுடன், இலங்கை நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தையும் வழங்கும். இப்புதிய தீர்வுகள் e-commerce, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சில்லறை வணிகம் போன்ற துறைகளுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான (MSME) வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும். மேலும், பணமில்லா கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதன் மூலமும், டிஜிட்டல் நிதிச் சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலமும், நாட்டின் தேசிய பொருளாதார முன்னுரிமை இலக்குகளை அடைய இது பெரிதும் பங்களிக்கும்.
உலகின் முன்னணி கொடுப்பனவு வலையமைப்புகளில் ஒன்றான UnionPay International, 180-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் மிக வலுவான ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. வங்கித் துறை மற்றும் கொடுப்பனவு உட்கட்டமைப்புகளில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தனது வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் UnionPay, உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைகளை ஊக்குவிப்பதில் ஒரு முன்னோடியாகவும் முக்கிய உந்துசக்தியாகவும் திகழ்கிறது.
“இந்தக் கூட்டாண்மையின் ஊடாக, Dialog Finance நிறுவனம் இலங்கை நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவங்களை வழங்கும். அதேவேளை, நாட்டின் டிஜிட்டல் நிதித்துறை மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு உந்துசக்தியாக எமது பங்களிப்பை இது மேலும் வலுப்படுத்தும். உலகளாவிய முன்னணி கொடுப்பனவு வலையமைப்பான UnionPay International இன் பலத்தையும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் டயலொக் குழுமத்தின் தலைமைத்துவத்தையும் இந்தப் பங்கான்மை ஒன்றிணைக்கிறது,” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க தெரிவித்தார்.
China UnionPay மற்றும் UnionPay International ஆகியவற்றின் தலைவர் திரு. டோங் ஜுன்பெங் இது குறித்துக் குறிப்பிடுகையில்: "புதிய நான்கு தரப்பு மாதிரியை (New Four-Party Model) பின்பற்றி, வங்கி அல்லாத முன்னணி நிதி-தொழில்நுட்ப (FinTech) நிறுவனங்களுடன் UnionPay தனது ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றது. எமது மொபைல் கொடுப்பனவுத் தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற வலையமைப்பின் பலத்தைப் பயன்படுத்தி, இலங்கையில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கும் (Financial Inclusion), அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் UnionPay தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்," என்றார்.
Fitch Ratings Lanka நிறுவனத்தினால் 'AA(lka) Stable' தரப்படுத்தலைப் பெற்றுள்ள Dialog Finance PLC, 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் ஓர் உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். இது நிறுவனத்தின் சட்டபூர்வ இணக்கப்பாடு, நற்பெயர் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.