Body

உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு டயலொக் மற்றும் இரத்மலானை செவிப்புலன் மத்திய நிலையம் இடையிலான கூட்டிணைப்பு

மார்ச் மாதம் முழுவதும் இலவச செவிப்புலன் பரிசோதனைகள் வழங்கப்படுகின்றன

2026 மார்ச் 06         கொழும்பு

 

Dialog Partners with Ratmalana Audiology Centre for World Hearing Day 2026

இலங்கையின் முதன்நிலை இணைப்பு வழங்குனரானடயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு இரத்மலானை செவிப்புலன் மத்திய நிலையத்தில் (RAC) மார்ச் மாதம் முழுவதும் இலவச செவிப்புலன் பரிசோதனைகளை வழங்குகிறது. இது இலங்கையில் செவிப்புலன் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

"சமூகங்கள் முதல் வகுப்பறைகள் வரை: அனைத்துக் குழந்தைகளுக்கும் செவிப்புலன் பராமரிப்பு" எனும் 2026-ஆம் ஆண்டின் உலகளாவிய கருப்பொருளுக்கு அமைய, இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது செவிப்புலன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனைத்து வயதினருக்கும் இச்சேவையை எளிதாகக் கிடைக்கச் செய்கிறது. செவிப்புலன் மற்றும் பார்வை குறைபாடுள்ளோருக்கான இலங்கை பாடசாலையுடன் (Ceylon School for the Deaf and Blind) இணைந்த ஒரு கூட்டு முயற்சியான இரத்மலானை செவிப்புலன் மத்திய நிலையம் உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மார்ச் 3 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை, காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை இலவச செவிப்புலன் பரிசோதனைகள் நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக செவிப்புலன் சுகாதார சேவைகளை அணுகுவதில் வசதி குறைந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். முன்பதிவுகளுக்கு 011 730 7308 அல்லது 077 394 5945 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரத்மலானை செவிப்புலன் மத்திய நிலையத்தை நிறுவுவதற்கும் அதன் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கும் டயலொக் நிறுவனம் இதுவரை 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளது. இது செவிப்புலன் மற்றும் பார்வை குறைபாடுள்ளோருக்கான இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதோடு, பரந்த சமூகத்திற்கும் தனது சேவைகளை வழங்குகிறது. அரச காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு இலவச செவிப்புலன் மதிப்பீடுகளையும், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, செவிப்புலன் கருவி மதிப்பீடு மற்றும் பொருத்துதல் மற்றும் பின்தொடர் மறுவாழ்வு சேவைகளையும் RAC வழங்குகிறது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 100,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த நிலையம் சேவையாற்றியுள்ளதுடன், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்காக விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்துகிறது. மேலும், இது களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிலும் செவிப்புலன் துறை (Audiology) மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சி வசதியாகவும் செயல்படுகிறது.

இரத்மலானை செவிப்புலன் மத்திய நிலையம் மற்றும் அது தொடர்பான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, செவிப்புலன் மற்றும் பேச்சு மறுவாழ்வு சேவைகளை டயலொக் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகின்றது.